கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 49 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இச்சமபவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மரக்காணத்தில் 14 பேர் பலியான போதும் எப்படி தொடர்ந்து விஷச்சாராயம் விற்க அனுமதி அளிக்கப்பட்டது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மனித உயிர்கள் தொடர்பான பிரச்சனை என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளது. மேலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.