“குழந்தைகள் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொண்டால் நாடு தோற்றுவிடும்” – டெல்லி மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்பி ஆதரவு!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான கமல்ஹாசன், “ஒரு தேசத்தின் குழந்தைகள் பதில்களுக்குப் பதிலாகத் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும்போது அந்த நாடு தோல்வியடைந்துவிடுகிறது” எனக் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உணர்ச்சிமிக்க அறிக்கை
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம். ஒரு தேசத்தின் குழந்தைகள் தங்களின் கேள்விகளுக்கான பதில்களுக்குப் பதிலாகத் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும்போது, அந்த நாடு தோல்வியடைந்து விடுகிறது. மாணவர்களே… உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள், இப்போது நாடு உங்களுக்காகத் தன் கடமையைச் செய்ய வேண்டும்!” என கமல்ஹாசன், ராஜ்யசபா எம்பி தெரிவித்துள்ளாா்.
வலுவடையும் ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், திரையுலகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது போராட்டக்களத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
