spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்

உயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்

-

- Advertisement -

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.உயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றில் இப்போது கற்பிக்கப்படும் இரு மொழிகளுடன் மூன்றாவதாக ஒரு மொழி கண்டிப்பாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

we-r-hiring

முதல் மொழியாக உள்ளூர் மொழியும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் கற்பிக்கப்படும் நிலையில், மூன்றாம் மொழியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த மொழிகளில் மாணவர்களின் புலமையை அளவிலும் வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு புலமை நிலைக்கும் ஏற்றவாறு மொழிப்பாடங்களுக்கு கிரெடிட் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 3 மொழிப்பாடங்களையும் கற்றுத் தேறாவிட்டால் பட்டம் பெற முடியாது என்பது தான் இத்திட்டத்தின் சாரம்சமாகும். இதன் மூலம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழியை  பல்கலைக்கழக மானியக் குழு கட்டாயமாக்கியுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பொறுத்தவரை, மாணவர்கள் விரும்பினால் அவர்கள் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். அம்மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஆனால், மாணவர்களின் விருப்பம் இல்லாமல் எந்தவொரு மொழியும் அவர்களின் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது.

சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களின் தாய்மொழிகளிலேயே, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வியை கற்று வருகின்றனர். அதேபோன்று, தமிழ்நாட்டிலும் தாய்மொழியிலேயே அக்கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிலைப்பாடு.

ஆனால், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால், எதிர் வரும் காலங்களிலாவது தமிழ்நாட்டு மாணவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வியை தமிழில் கற்க வேண்டும். இதற்கான செயல் திட்டங்களை ஆராய்ந்து தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி பல்கலைக்கழக மானியக் குழு ஆணையிட்டிருப்பது கடும் கண்டத்துக்குரியது. இந்த ஆணையின் மூலம், இந்தி, சமஸ்கிருத மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயல்வது கண்கூடாகத் தெரிகிறது.

வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதால் பயன் உண்டு. ஆனால், தாய்மொழி தவிர்த்த இந்தி, சமஸ்கிருதம் உள்நாட்டு மொழிகளை கற்றுக் கொள்வது எந்த வகையான வேலைவாய்ப்புக்கும் பயனளிக்காது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இன்றைய நிலையில் மூன்றாம் மொழியை கற்பிப்பது சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களை கற்பித்தல் போதுமானது.  இதுவே எதிர்காலத்தில் ஒரு மொழி கொள்கையாக இருக்க வேண்டும்; அதுவும் எம் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம்.

எனவே, உயர்கல்வி நிறுவனங்களில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை, தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

ஊட்டி தேயிலை பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்…

MUST READ