உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தயார்நிலையில் உள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக பாசன விவசாயிகள் சங்கம் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே எந்தவித சமரசம் உடன்படிக்கையும் ஏற்படாததால் மதுரை மாநகராட்சி நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சிறப்பு நிதியில் இருந்து 17 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விழா மேடை, வாடிவாசல், பார்வையாளர் மேடை மற்றும் தடுப்பு வேலிகள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கால்நடை பராமரிப்புத்துறை பரிசோதனை மையம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிப்பு மையம் மற்றும் மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜகுமார் உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள்,63 கால்நடை உதவி ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிட்சையளிக்க தயார் நிலையில் உள்ள அம்மா ஆம்புலன்ஸ்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

காவல்துறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் மற்றும் மதுரை தெற்கு காவல் உதவி ஆணையர் சாய் பிரணீத் ஆகியோர் தலைமையில் 1300 போலீசார் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வாடிவாசல் மாடுகள் சேகரிக்கும் மையம், அவனியாபுரம் பேருந்து நிலையம், பெரியார் சிலை மற்றும் வெள்ளைக்கல் பிரிவு, திருப்பரங்குன்றம் – முத்துப் பட்டி பிரிவு ஆகிய 5 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் அவனியாபுரம் நகர் பகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
சுகாதாரத் துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத்குமார் தலைமையில் 30 மருத்துவர்கள், 54 செவிலியர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 3 பிரிவுகளாக மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முதலுதவி சிகிட்சை அளிக்க முதல் உதவி மையம் அவனியாபுரம் அரசு பள்ளியில், மருத்துவ குழுவினர் அமைத்து தயாராக நிலையில் உள்ளனர்.
