spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

-

- Advertisement -

K Balakrishnan

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுக்காட்டுதுறையிலிருந்து தமிழக மீனவர்கள் ஐந்து பேர் பிப்ரவரி 2, 2024 அன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களிடமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன், கடிகாரம், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். காயம் அடைந்த 5 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது, கடலில் மூழ்கடிப்பது, அடித்து துன்புறுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி சாதனங்களை நாசமாக்குவது போன்ற தொடர் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதனால் பெரும் துயரங்களையும், அச்சுறுத்தல்களையும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது வேதனைக்குரியது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்தினாலும் தமிழக மீனவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று ஒரு சிறுதுரும்பைக் கூட அசைக்க மறுத்து தமிழக மீனவர்களையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது. இதுவே இதுபோன்ற தொடர் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

 

எனவே, ஒன்றிய பாஜக அரசு இனியாவது தமிழ்நாட்டிற்கு விரோதமான போக்கை கைவிட்டு, இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கும், மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ