மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வயதை சுட்டிகாட்டி விசாரணை அதிகாரி நேரில் சென்று விசாரணை செய்துகொள்ள அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரி கடந்த 20.07.2025 ஆம் தேதி காலை 11:30 மணியளவில் தனது விசாரணையை மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வந்து தொடங்கினார்.
ஆதீனத்திடம் விசாரணை செய்யும் போது ஆதீன ஆதரவாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாகவும், ஆதீனத்திடம் விசாரணை அதிகாரி விசாரனை செய்யும் பொழுது விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆதீனத்திற்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மதுரை ஆதீனத்திற்கு எதிராக காவல்துறை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வருகிறது.
”எதிரிகளின் பயமே நமது வெற்றி” திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி – ஆர்.எஸ்.பாரதி!