ஜனவரி 1 முதல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே மேலாண்மைக்கான முக்கிய மாற்றங்களை என்பிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யுபிஐ (UPI) வசதி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான கட்டணம் முதல் மின்சாரம், வைஃபை, டிடிஹெச் போன்ற மாதாந்திர கட்டணங்கள் வரை அனைத்தையும் யுபிஐ மூலம் மிக எளிதாக செலுத்த முடிகிறது. இதனால் பணம் கையில் எடுத்துச் செல்லும் அவசியமும் குறைந்துள்ளது.

கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை உள்ளீடு செய்தோ சில விநாடிகளில் பணம் அனுப்பும் வசதி இருப்பதால், யுபிஐ செயலிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பல செயலிகள் மூலம் பயனர்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்வது இந்தியாவின் தேசிய பணப் பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) ஆகும். யுபிஐ பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், ஏற்கனவே ‘ஆட்டோ பே’ எனப்படும் தானியங்கி பணம் பிடித்தல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வைஃபை ரீசார்ஜ், டிடிஹெச் கட்டணம், சந்தா தொகை போன்றவற்றை மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் தானாகவே செலுத்த முடிகிறது.
இந்நிலையில், பல்வேறு யுபிஐ செயலிகளில் செயல்பாட்டில் இருக்கும் ஆட்டோ பே மென்டேட்டுகளை ஒரே இடத்தில் நிர்வகிக்கும் புதிய வசதியை என்பிசிஐ கொண்டு வந்துள்ளது. இதற்காக upihelp.npci.org.in என்ற தனி இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம், பயனர்கள் தங்களது அனைத்து யுபிஐ செயலிகளிலும் உள்ள ஆட்டோ பே விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
இந்த புதிய வசதி மூலம் ஆட்டோ பேவை ரத்து செய்தல், மாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளலாம். மேலும், ஒரு யுபிஐ செயலியில் உள்ள ஆட்டோ பே மென்டேட்டை வேறொரு யுபிஐ செயலிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கூகுள் பேவில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை ரீசார்ஜ் ஆட்டோ பேயை ஒரே கிளிக்கில் போன்பேவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
யுபிஐ பயன்பாட்டை பயனர் நட்பாக மாற்றவும், தானியங்கி பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக நிர்வகிக்கவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதத்திலேயே அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், டிசம்பர் 31க்குள் இந்த புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், ஜனவரி 1 முதல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே மேலாண்மைக்கான தனிப்பிரிவு காணப்படும். அந்தப் பகுதியில் எந்தெந்த சேவைகளுக்காக ஆட்டோ பே அமைக்கப்பட்டுள்ளது என்பதையும், அவற்றை மாற்றவோ ரத்து செய்யவோ முடியும்.


