செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட காரணமே அமலாக்கத்துறை- ரகுபதி
புதுக்கோட்டை அடுத்த சிவபுரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் ஜனநாயக படுகொலை. ஒரு மனிதனை 17 மணி நேரத்திற்கு மேலாக துன்புறுத்துவது துயரப்படுத்துவது சட்டத்தில் இல்லாத ஒன்று அவருக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுக்கவில்லை. நெஞ்சு வலி வருவதற்கான அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம்தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுத்து மற்றவர்களை பயப்பட வைக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுக எதற்கும் பயப்படாது என்று பாஜகவுக்கு தெரியாது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளது அவரது புத்தியை காட்டுகிறது. இனிமேல் அமலாக்கத்துறை இதுபோன்று எடுக்கும் நடவடிக்கையை தடுக்க சிபிஐ இனி தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று இரவுக்கு பிறகு தான் செந்தில் பாலாஜி சிறை துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். சிறைத் துறையின் விதிகளின்படி ஒருவரை ஒரு நாளைக்கு மூன்று பேர் அல்லது மூன்று மனுக்கள் இப்படித்தான் பார்க்க வேண்டும்.
நீதிமன்றங்களுக்கும் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட கூடியவர்கள் நாங்கள் அந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும் சட்டப் போராட்டம் மூலம் நல்ல தீர்ப்பை பெற முடியும் என்று நம்பிக்கை உடையவர் நமது தமிழ்நாடு முதலமைச்சர். அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான் அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜராக சொன்னால் ஆஜராக வேண்டியது தான். செந்தில் பாலாஜியை வைத்து கொடுமைப்படுத்தினால் மற்ற அனைவரும் பயப்படுவார்கள் என்று அமலாக்கத்துறையினர் நினைக்கிறார்கள். திமுக எதற்கும் பயப்படாது என்று பாஜகவுக்கு தெரியாது” என்று தெரிவித்தார்.