மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது. பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில், மின் துறை ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் 1 12 2019 நாள் அன்று பெரும் ஊதியத்தில் ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பணியாளர்கள் பயன்பெறவுள்ளார்கள்.
மேலும் 1/12/2019 ஆம் நாள் அன்று 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பணி பலனாக 1/12/2019 ஆம் நாள் அன்று பெரும் ஊதியத்தில் மூன்று சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் 62 ஆயிரத்து 548 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு 1/12/2019 முதல் வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையான 516 கோடியே 71 லட்சம் ரூபாயும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகளும், ஊழியர்களும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். ஊதிய உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த அமைச்சரிடம் பணி உறுதி செய்யப்படாத கேங்மேன் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என கூறியதும் அனைவரும் அமைச்சர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர்.