போக்குவரத்துத்துறை தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர், “சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது. உலக வங்கி டெண்டர் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்க அறிக்கை கொடுக்க வேண்டும். உலக வங்கியின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசகரை நியமிக்கவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆலோசகர்களின் அறிக்கைக்கு பிறகே மேல்முடிவு எடுக்கப்படும்.
தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகள் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிற பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது. தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அரசின் நகரப் பேருந்துகளில் வழங்கப்படும் சலுகைகள் தொடரும். தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது. எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” எனக் கூறினார்.