அடித்து தூள் கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த ஆண்டு ஐஐடிக்கு சென்ற அரசுப் பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடிக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 75, இந்த ஆண்டு 225 பேர் செல்கின்றனர். உயர்க்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் செல்லும்போதுதான் சமூகநீதி முழுமையடைகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான். கல்வி நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. முந்தைய தலைமுறையினரின் போராட்டத்தால் கிடைத்தது.
நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 245 அரசுப்பள்ளி மாணவர்கள். எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று அனைவருக்கும் கிட்டியுள்ளது. அரசு பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” என்றார்.