முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக் கோரிய வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் அணை பாராமரிப்பு பணிகளுக்கு தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிட்டு இருந்தது.இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மேற்பார்வை குழுவில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அணைகள் ஆய்வு அதிகாரி ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் அடுத்த் வாரம் நடைபெற உள்ளது.