கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்கள் தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள நமது மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.