கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை உள்ளிட்ட 3 பேர் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ரிட் மனு தொடர்ந்திருந்தனர். அதேபோல் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரி, பாஜகவும் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த 5 மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, ஆச்சாரியா அமர்வு விசாரித்தது. ஏற்கனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று மீண்டும் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐ விசாரணையை கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைத்த நீதிபதிகள், அந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும், குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
அப்போது சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்சநீதிமன்ற கருத்தில் கொள்ளவேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதனை நிச்சயம் கருத்தில் கொள்வோம் என நீதிபதிகல் தெரிவித்தனர்.