மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5வது சுற்றுகள் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார்.


மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். இதில் தற்போது வரை 5 சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 455 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதில் 71 காளைகள் மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்பட்டு உள்ளன.

5வது சுற்று முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார். பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை பிடித்து 2வது இடத்தில் உள்ளார். நத்தம் பார்த்திபன் 8 காளைகளை பிடித்து 3வது இடத்தில் உள்ளார். இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 7 மாடுபிடி வீரர்கள், 9 காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேர் என 23 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


