செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்து இன்று நடைபெற்ற திடீர் விமான விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் விமானப்படைக்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிப் பறக்குதலில் ஈடுபட்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நொடிகளில் விமானம் வானில் வெடித்துச் சிதறி கீழே சரிந்தது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பாக தரையிறங்கினர். இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். இதையடுத்து, இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிகழ்வை நேரில் கண்டவர்கள், “விமானம் பெரும் சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தது” என தெரிவித்தனர். விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது குறித்து விமானப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, புதுக்கோட்டை கீரனூரில் இன்று காலை சிறிய ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் அவசரத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் வாகனங்கள் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.


