Homeசெய்திகள்தமிழ்நாடுஇடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் - வேளாண் துறை அமைச்சர்

இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்

-

இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் தகுதியுடைய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கரும்பு கொள்முதலுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், 2.16 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமான கரும்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தரர்களின் தலையீடு இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் இடைத்தரகர்கள் தலையீடு காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் இந்த முறை வேளாண் துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணைந்து கரும்பு கொள்முதலில் ஈடுபடும் எனவும் வேளாண் துறை சார்பில் தரமான கரும்பு எங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது என்பதை கூட்டுறவு துறைக்கு காண்பிக்கும் விதமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கரும்பு கொள்முதலை முழுவதுமாக மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பிலேயே நடைபெறும் எனவும் இதையும் மீறி இடைத்தரகர்கள் இதில் தலையீடு இருந்தால் காவல்துறை மூலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

MUST READ