பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் ஒட்டு மொத்தமாக, சென்னை திரும்ப தொடங்கியதால், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதை அடுத்து சென்னைக்கு வரும் விமானங்களில், விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு. ஆனால் சென்னையில் இருந்து, வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைவு. விமான நிறுவனங்கள் ஒரே ஊருக்கு, போகும் போது ஒரு கட்டணமும், வரும்போது ஒரு கட்டணமும், இரட்டைக் கட்டணம் முறையை செயல்படுத்துவதால் பயணிகள் கடும் அவதி.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைகளை ஜாலியாக கழிப்பதற்கு சென்னையில் வசிக்கும் பல லட்சம் பேர்கள், தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு குடும்பம் குடும்பமாக கடந்த வாரத்தில் புறப்பட்டு சென்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, விடுமுறையும் நிறைவடையும் நேரத்தில் இருப்பதால், வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
அதேபோன்ற பயணிகளில் பலர், விடுமுறையை முழுமையாக கழித்து விட்டு, ஞாயிறு அன்று விமானங்களில் சென்னை திரும்புவதற்காக, விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்கின்றன.
இதனால் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து, சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட் கட்டணங்களும், பல மடங்கு அதிகமாக உள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரும் விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும், அதே நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் டிக்கெட் கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.
மதுரை- சென்னை ரூ.10,046 முதல், ரூ.17,991வரை,
சென்னை- மதுரை ரூ.3,975 முதல் ரூ.4,947 வரை.
திருச்சி- சென்னை ரூ.6,049 முதல் ரூ.11,089 வரை.
சென்னை- திருச்சி ரூ.4,862 முதல் ரூ.5,282 வரை.
கோவை- சென்னை ரூ.5,552 முதல் ரூ.11,089 வரை.
சென்னை- கோவை ரூ.3,260 முதல் ரூ.6,492 வரை.
தூத்துக்குடி- சென்னை ரூ.10,750 முதல் ரூ.17,365 வரை.
சென்னை- தூத்துக்குடி ரூ.5,071 முதல் ரூ.5,281 வரை.
சேலம்- சென்னை ரூ.10,441.
சென்னை- சேலம் ரூ.4,862.
இதைப் போன்று விமான கட்டணங்கள் ஒரே நாளில், ஒரே ஊருக்கு, ஒரே விமானத்தில், சென்னையில் இருந்து செல்வதற்கு குறைந்த கட்டணமும், சென்னைக்கு வருவதற்கு பல மடங்கு அதிக கட்டணமும், விமானம் நிறுவனங்கள் வசூலிப்பது, பயணிகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணிகளின் கூட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, பயணிகளிடம் அதிக கட்டணங்களை விமான நிறுவனங்கள் வசூலிப்பதாக, பயணிகள் தரப்பில் குறை கூறுகின்றனர்.
இது குறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறுகையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாமல், பல விமானங்கள் காலியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அங்கிருந்து சென்னைக்கு வருகின்ற விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே காலி ஆகிவிட்டதால், அதிக கட்டணங்கள் டிக்கெட்டுகள் மட்டுமே தற்போது இருக்கிறது.
எனவே அந்த அதிக கட்டணங்களை, நாங்கள் பயணிகளிடம் வசூலிக்கிறோம். அது பயணிகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இனிமேல் வரும் காலங்களில், பயணிகள் தங்களுடைய பயணத்தை முன்னதாகவே திட்டமிட்டு, 2 மாதங்களுக்கு முன்னதாகவே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டால், இதைப்போல் அதிக கட்டணங்கள் செலுத்தாமல் குறைந்த கட்டணங்களிலேயே பயணிக்கலாம். அதை விடுத்து கடைசி நேரத்தில் விமான டிக்கெட் எடுத்து பயணிப்பதால், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது என்று கூறுகின்றனர்.