
தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22) பிற்பகலில் தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மேலும் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை (அக்.23) வட தமிழகம் , புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது புயலாக மாறக்கூடுமா என்பது இன்று தெரியவரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் தற்போது திருவள்ளூர் , ராணிபேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவடங்களிலும் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் 12 செ.மீ முதல் 20.செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



