திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மீட்பு படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சார்பில் ரயில் விபத்து தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி ரயில்வே குட்ஷெட் யார்டில் நடைபெற்றது. இதனையொட்டி 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது போன்று அமைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து, அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்ட நிலையில், ரயில்வே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து, ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தும் ஒத்திகை மேற்கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.