திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவை மாற்றி பதிவிட்டு கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனினும், ரிதன்யாவின் மரணத்தை, சந்தேக மரணம் என்று மட்டுமே போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ரிதன்யாவின் கணவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யவும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ரிதன்யா குடும்பத்தினர், இன்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தனது மகள் இறப்பதற்கு முன்பாக பதிவுசெய்த ஆடியோவில் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு குறிப்பிட்டுள்ளதால், சந்தேக மரண வழக்கை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் உடனடியாக சுதந்திரமாக விசாரிக்கும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்தார். தனது மகள் இல்லாமல், இருந்தும் இறந்தது போல வாழ்ந்து வருவதாகவும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 3 நாட்களில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வதால் விசாரணை மந்தமாக நடைபெறுவதாக, தனக்கு தோன்றுவதாகவும் அவர் கூறினார். இதேபோல மற்ற பெண்களுக்கு நேரிடக்கூடாது எனவும், ரிதன்யா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக தக்க தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகம், உள்துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.