spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்- சீமான்

அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்- சீமான்

-

- Advertisement -

அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்- சீமான்

மாணவச்செல்வங்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பினை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் சூன்-01 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தாங்க முடியாத கடும் வெயில், மற்றும் கொரோனா தொற்றுப் பரவலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவச்செல்வங்களை வாட்டி வதைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

we-r-hiring

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் மற்றும் மாறிவரும் பருவநிலை காரணமாக கோடை மற்றும் குளிர்காலங்கள் நிலவும் மாதங்களில் அண்மைக்காலமாக பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் நீண்டும், குளிர் மற்றும் மழைக்காலங்கள் குறைந்தும் வருவதோடு, கோடைக்காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் மிகக்கடுமையாகவும் உள்ளது. கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வயது நிரம்பியவர்களே திணறி வருவதன் காரணமாக, வாய்ப்புள்ள பல தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணி புரியவும் அனுமதித்துள்ளன. அதுமட்டுமன்றி கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

ஆனால், இவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாமல் மாணவர் சேர்க்கை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழ்நாடு அரசு ஜூன்-01 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசின் சிறிதும் பொறுப்பற்ற இம்முடிவு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு கோடை வெப்பத்தையும், கொரோனோ நோய்த்தொற்றுப்பரவலையும் கருத்திற்கொண்டு், மாணவ-மாணவியர் நலன் காக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவை, தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ