டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது: செந்தில்பாலாஜி
டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்

தமிழகத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் 500 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது. டாஸ்மாக் வருமானத்தில் அரசு இயங்கவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மீது தேடி தேடி குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.5.5 கோடி அபராதம் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக நடந்துவருகிறது.” எனக் கூறினார்.