100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் – செந்தில் பாலாஜி
67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த அதிமுக ஆட்சியில் 9 மணிநேரம் மட்டுமே விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழத்தில் தற்போது 18 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. வீடு ஒன்றுக்கு எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும் இலவச 100 யூனிட் மின்சாரம் தொடரும். வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்ற கூறவில்லை.
வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டரில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளுக்கான மின் இணைப்பில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது. கோடை காலத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு
இருந்தால் ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது தவறான செய்தி” எனக் கூறினார்.