பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று 2வது நாளாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நேற்று இரண்டாம் நாளில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 7,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இதில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதேபோல், கடந்த 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 4,13,215 பயணிகள் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.