கச்சத்தீவு அருகே மீன்பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி சிறைபிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்த விசைப்படகில் 13 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இன்று கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி
மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அச்சமடைந்த 2 மீனவர்கள் கடலில் குதித்தபோது இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 13 மீனவர்களையும் கைதுசெய்த இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
தொடர்ந்து, காயம் அடைந்த 2 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 25ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.