

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர்.
“9 வயது சிறுவன் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு”- தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
இப்பள்ளியில் இன்று (ஜன.24) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் கலந்து கொண்டு பேசினார்.
மாணவர்கள் ஏற்கனவே நீண்ட நேரமாகக் காத்திருந்ததால், விரைவாக பேசிவிட்டு சைக்கிள்கள் வழங்கலாம் என்று கூறினார். இதற்கிடையே, அங்கு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராஜி, தி.மு.க.வைச் சேர்ந்த தங்களைப் பேச விடாமல் தடுத்ததை ஏற்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு அருள் எம்.எல்.ஏ., நீங்களே பேசுங்கள் என்று கூறினார். அது எப்படி எங்களை பேசவிடாமல் நீங்கள் பேசலாம்? அனுமதி பெற்று தான் நாங்கள் பேச வேண்டுமா? என்று தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில், எம்.எல்.ஏ. அருள் இங்கு நடந்ததை அனைத்திற்கும் மாணவ, மாணவிகளிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று மாணவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். அப்போது, பலரும் அருள் எம்.எல்.ஏ.வைத் தடுத்த நிலையில், இரண்டு முறை மாணவ, மாணவிகள் முன்பு அவர்களது காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.
“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!
தொடர்ந்து இங்கு நடந்தவற்றை மறந்து மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சைக்கிள் ஓட்டும் போது சாலையில் கவனம் செலுத்த வேண்டும், சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று பேசிய எம்.எல்.ஏ. அருள் மீண்டும் மாணவ, மாணவிகளிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளி நிகழ்ச்சியில் நடந்த இந்த வாக்குவாதத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.


