ஒன்றிய அரசின் கல்விக்கான ‘ஒருண்ங்கிணந்த மாவட்ட தகவல் முறைமை’ (UDISE+ 2025-26) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவர அறிக்கையில், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் தேசிய சராசரியை விடப் பல மடங்கு சிறந்து விளங்குவது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. ஆசிரியர் தேவை, மாணவர் சேர்க்கை விகிதம், இடைநிற்றல் குறைப்பு உள்ளிட்ட அனைத்துக் குறியீடுகளிலும் தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மற்ற பெரிய மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த அறிக்கையின் மிக முக்கியத் தரவுகள் மற்றும் சிறப்பம்சங்கள் வருமாறு:

குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள்; அதிகப்படியான மாணவர்கள்!
இந்திய அளவில் தமிழ்நாடு கல்வி உள்கட்டமைப்பை எவ்வளவு திறம்படப் பயன்படுத்துகிறது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்தப் பள்ளிகளில் வெறும் 3.9 சதவீதப் பள்ளிகளை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, ஒட்டுமொத்த இந்திய அளவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் 5.0 சதவீதத்தினருக்குத் தரமான கல்வியை வழங்கி சாதனை படைத்துள்ளது.
தற்போதைய நிலையில் (2025-26) தமிழ்நாட்டில் 57,566 பள்ளிகளில் 1,24,02,872 (1.24 கோடி) மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்குக் கல்வி கற்பிக்க 5,69,909 ஆசிரியர்கள் உள்ளனர். தேசிய அளவில் ஒவ்வொரு பள்ளிக்கும் சராசரியாக 169 மாணவர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் திறமையான பயன்பாட்டின் காரணமாக ஒரு பள்ளிக்குச் சராசரியாக 215 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உள்ளனர். மேலும், தேசிய அளவில் மாணவர் – ஆசிரியர் விகிதம் 24 ஆக இருக்கும் போது, தமிழ்நாட்டில் அது 22 என்ற மிகச் சிறந்த அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய சராசரியை விடப் பல மடங்கு அதிகமான சேர்க்கை விகிதம்:
பள்ளிக்கல்வியில் மாணவர்களின் மொத்தச் சேர்க்கை விகிதத்தில் (GER) தேசிய சராசரியை விடத் தமிழ்நாடு நீண்ட தூரம் முன்னேறியுள்ளது. தொடக்கப்பள்ளியில் தேசிய சராசரி 89 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாடு 92 சதவீதத்தையும், நடுநிலைப்பள்ளியில் தேசிய சராசரி 90 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாடு 95 சதவீதத்தையும் பெற்றுள்ளது.
அதேபோல், உயர்நிலைப்பள்ளியில் தேசிய சராசரியான 82 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு 97 சதவீதத்தையும், மேல்நிலைப்பள்ளியில் தேசிய சராசரியான 62 சதவீதத்தை விடத் தமிழ்நாடு 85 சதவீதத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. மேல்நிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் இந்தியாவின் அனைத்துப் பெரிய மாநிலங்களிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைநிற்றலே இல்லாத தொடக்கக் கல்வி!
தமிழ்நாடு அரசின் சிறப்பான கல்வித் திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் காரணமாக மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் (Dropout) விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழ்நாட்டில் மாணவர் இடைநிற்றலே இல்லை (0%) என்ற வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய அளவிலான இடைநிற்றல் 9.5 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது வெறும் 6.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்குப் பின் குவியும் தொழிற்கல்வி வாய்ப்புகள்:
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்கள் தங்களது கல்வியைப் பாதியில் நிறுத்தாமல் பல்வேறு தொழிற்கல்விகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தமிழக அரசின் கல்வி மாடல் வழிவகை செய்துள்ளது. அதன் பயனாக, 2025-26 ஆம் கல்வியாண்டில் மட்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83,000 மாணவர்களும், ஐடிஐ (ITI) படிப்புகளில் 60,355 மாணவர்களும், தொழிற் கல்வியில் (Vocational Education) 1,43,955 மாணவர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பில் முதலிடம்:
பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் உயர்கல்வி வரை சமமான வாய்ப்புகளைத் தமிழ்நாடு வழங்கியுள்ளது. இதுதவிர, பள்ளிகளில் மின்சார வசதி, சுத்தமான குடிநீர், நவீன கழிப்பறைகள், இணையதள வசதி (Internet), மின்னணு உள்கட்டமைப்பு (Digital Infrastructure) மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பள்ளி உள்கட்டமைப்புகளிலும் தேசிய சராசரியை விடத் தமிழ்நாடு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் இறுதி மதிப்பீடு:
”UDISE+ 2025-26 அறிக்கையின்படி, இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் விரிவான செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிக்கல்வி அமைப்புகளில் தமிழ்நாடும் ஒன்றாகத் திகழ்கிறது. அதிகப்படியான மாணவர் பங்கேற்பு, முழுமையான மாணவர் தக்கவைப்பு, திறமையான உள்கட்டமைப்புப் பயன்பாடு மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்துள்ள தமிழ்நாடு, தற்போது வேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்ப இளைஞர்களை உயர்கல்வி மற்றும் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்குத் தயார்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது” என இந்த அறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது.
