முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார். ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள். நடுகடலில் எழுதாத பேனாசிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்?
தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்.
எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க முதலமைச்சரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.