ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைய உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் முலம் திருச்சி சென்றடைந்தார். அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சிப்காட் தொழிற்பூங்காவில் 130 ஏக்கர் பரப்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தைவான் நிறுவனத்தின் புதிய காலணிகள் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2ஆம் தொகுப்பைத் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்காக வாரணவாசி குழந்தைகள் மையத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை, குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த குழந்தைகளுக்கு சிறுதானிய முறுக்கு, சிறுதானிய லட்டு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், கீதாஜீவன், சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டனர்.