வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை 03.01.2025) சோதனை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சோதனையின் பின்னணி என்ன? தமிழகத்தில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2019 மார்ச் 29-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் (மார்ச் 30) வரை துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் ரூ.11.51 கோடி பணம் பறிமுதல். இதற்கிடையில், ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் இருந்து துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாகவும் பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
அப்போது, வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
வழக்குப் பதிவு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் நீட்சியாக அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகினர். அப்போதில் இருந்து இவ்விவகாரத்தில் அமைச்சர் துரை முருகன் மீது அமலாக்கத் துறை விசாரணை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய சோதனை நடைபெறுகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது அவர் இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ அதே அளவுதான் எனக்கும் தெரியும் என்றாா். மேலும் யார் வந்திருக்கிறாா்கள் என்று தெரியவில்லை. யாரும் வீட்டில் இல்லை. வீட்டில் வேலையாட்கள் மட்டுமே உள்ளனர். வந்திருக்கிற அதிகாரிகள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்த பிறகு நான் கருத்து கூறுகிறேன்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ( 03.01.2025) வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை 2019 மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைமுருகன் தனது வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வரும் நிலையில் தனது வழக்கறிஞருடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறாா்.