இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல், நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் பலமாக ஒலித்துக் கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக டாக்டர் B.R.அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட 75-வது ஆண்டு விழா, எழும்பூர் நீதிமன்றம் நிறுவப்பட்டு 110-வது ஆண்டு விழா எனும் அடிப்படையில் முப்பெரும் விழா எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எஸ் சுந்தர், பி.டி. ஆஷா, நீதியரசர்கள் ஜெகதீஷ் சந்திரா, நீதியரசர் பரத சக்கரவர்த்தி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஆர்.டி சேகர், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் துரை கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், பேசிய நீதியரசர்கள் நீதிமன்றங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?, தங்களை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்?, தன் கட்சியாளர்களுக்கு உண்மையை உரைத்து, நீதியை பெற்றுத்தரும் வகையில் தங்களுடைய செயல்பாடுகளை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழக்கறிஞர்களுக்கு வழங்கினர்.
விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல், நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றார். கடைசி நம்பிக்கையாக இருப்பது நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் மட்டும்தான் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்றத்தாழ்வுகளை உடைக்க வேண்டும் என்று போராடியதாலேயே அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடுகிறோம் என உதயநிதி பேசினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்த அம்பேத்கரது கொள்கைகளும் தந்தை பெரியாருடைய கொள்கைகளும் பல இடங்களில் ஒத்துப் போவதாக அவர் தெரிவித்தார். மறைந்த நேரத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனக்கான இடத்தை பெற்றவர் தான் முத்தமிழ் டாக்டர் கலைஞர் என்று துணை முதல்வர் குறிப்பிட்டார்.
மாநில அரசின் நம்பிக்கையாக நீதி செயல்பட்டு வருகிறது என்றும் வழக்கறிஞர் நல நிதியை ஏழு லட்சத்திலிருந்து 10 இலட்சமாக முதலமைச்சர் உயர்த்தி, கொடுத்துள்ளதையும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். சட்டப் பணிகளில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாடு முதல் இடம் பெற வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் நீதிபதிகளுடன் வழக்கறிஞர்கள் சேர்ந்து பணியாற்றும் போது, தேங்கிய வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் என்றும் நீதியரசர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
500 ஆண்டுகள் பழமையான கிராமம்…ரூ.1000 வரை மிச்சம்… தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மக்கள்