விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.


வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனத்த மழை பொழிந்தது. விழுப்புரம் நகரம், வானூர், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானூர் பகுதியில் 184 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வல்லம் பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும், விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 168 மில்லி மீட்டர் மழையும், செஞ்சி பகுதியில் 123 மில்லி மீட்டர் மழையும், கெடார் பகுதியில் 115 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 103 மில்லி மீட்டர் மழையும் முகையூர் பகுதியில் 93 மில்லி மீட்டர் மழையும், மரக்காணம் பகுதியில் 94 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசர கால கட்டுப்பாட்டு அறையினை, ஆட்சியர் அப்துல் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் தரை பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியர் அப்துல் ரகுமான், அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதனிடையே, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


