கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் பாடலீஸ்வரர் நகரில் உள்ள ஒரு மனைப்பிரிவுக்கு திட்ட மற்றும் கட்டிட அனுமதிக்காக, கடலூர் ஆணைக்குப்பத்தை சேர்ந்த தம்பதியினர் சேதுபாரதி – பிரித்தீ கடலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனரின் கையெழுத்தை போலியாக போட்டுதுடன், போலி அரசாங்க முத்திரை மற்றும் போலி எண் இட்டு மனைப்பிரிவு ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் இருசப்பன் தெருவில் வசிக்கும் ஒருவருக்கு போலி எண், போலி அரசாங்க முத்திரையிட்டு, மாநகராட்சி ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு திட்ட மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் ஆணைக்குப்பத்தை சேர்ந்த தம்பதியினர் போலியாக அரசாங்க முத்திரை மற்றும் அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக இட்டு, கட்டிட அனுமதி வரைபடம் தயார் செய்து வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் சொரக்கல்பட்டு ஸ்ரீரங்கமேஸ்திரி தெருவில் ஒரு பெண்ணுக்கு போலி அரசாங்க முத்திரை, போலி எண் இட்டு, மாநகராட்சி ஆணையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு, திட்ட மற்றும் கட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அந்த தம்பதியினர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக பல்வேறு நபர்களுக்கு கட்டிட திட்ட அனுமதி மற்றும் ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு அளித்து, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசுக்கும், மாநகராட்சிக்கும் பல கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த சங்கீதா என்ற பெண், திருப்பாதிரிப்புலியூர் அருண் நகரில் வசிக்கும் ஒருவருக்கு போலி முத்திரை மற்றும் ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு திட்ட மற்றும் கட்டிட அனுமதி அளித்துள்ளார். போலி அரசாங்க முத்திரை மற்றும் அரசு அலுவலர்களின் கையொப்பமிட்டு மனைப்பிரிவு ஒப்புதல், திட்ட மற்றும் கட்டிட அனுமதி வழங்கிய தம்பதி உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாநகராட்சி ஆணையர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.