ஆளுநர் நிகழ்ச்சியில் ஏ.சி.யில் புகை வந்ததால் பரபரப்பு
கோவை சரவணம்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏசி இயந்திரங்களில் அடுத்தடுத்து அதிக சத்தத்துடன் புகை போல கியேஸ் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி மருத்துவமனை கல்வி குழுமம் சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக ஆளுநர் ரவி மேடைக்கு வந்தவுடன், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடி முடித்து, தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது அரங்கில் இருந்த 3 ஏ.சி இயந்திரங்கள் அடுத்தடுத்து திடீரென சப்தத்துடன் கியேஸ் வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வேறு பகுதிக்கு நகர்ந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஏ.சி மிஷன்களை உடனடியாக நிறுத்தினர். இதையடுத்து மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.