மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

வைக்கம் பயணம் தொடர்பாக இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக் களம் வைக்கம் என்ற தலைப்பில் திமுக உடன்பிறப்புகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம் என்றும், அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம் என்றும் கூறியுள்ளார்.
அந்தப் பயணம் அரசியல் களத்திலும் தொடர்ந்ததன் விளைவாகத்தான் இந்திய அளவிலான இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்டவையாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவர் நெறிப்படி, அனைத்துச் சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழும் சமத்துவபுரங்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்குத் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சமத்துவக் குடியிருப்பு அமைக்கப்பட்டதில்லை என்பதால்தான் நம் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று போற்றுகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது என்று காட்டமாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறைச் சாத்தியமில்லாத – மக்களாட்சி முறைக்கு விரோதமான – கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு – ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனும், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று அழைப்பு விடுத்துள்ளார்.
நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் போராடுவோம்!அவர்களைப் போலவே வெற்றி காண்போம்! என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.