ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அதிர்ச்சி அளிக்கிறது- டிடிவி தினகரன்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதானை திருப்பி அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும். வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.