தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சிபிஐ அலுவலகத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரவீன் சக்கரவர்த்தி, தனது சமூக வலைதள பதிவில் தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் இணைந்த கூட்டணியின் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், அந்த அணிக்கு “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” என்ற பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் தரப்புகள் அதற்கு மறுப்பு தெரிவித்தன. தாங்கள் அத்தகைய கூட்டணியில் இடம்பெறவில்லை என்றும், இதுகுறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் தெளிவுபடுத்தின. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், ப. சிதம்பரத்தின் வருகை மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என கூறினார். மேலும், தவெக கூட்டணியில் இணைவது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
கூட்டணி தொடர்பான முடிவுகள் தனிப்பட்ட சந்திப்புகள் மூலம் எடுக்கப்படாது; கட்சியின் செயற்குழு மற்றும் கமிட்டிகளே அதுகுறித்து முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார். தற்போது தாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும், தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும் தொடர்வதாகவும் அவர் கூறினார். உள்ளாட்சி அல்லது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிகள் குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும் வீரபாண்டியன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மாநிலங்களவை வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு பிரவீன் சக்கரவர்த்தி சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு சென்று தலைவர்களை சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ப. சிதம்பரத்தின் வருகையும் இடம்பெற்றதால், கம்யூனிஸ்ட் கட்சிகளை புதிய கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஆனால் அதனை சிபிஐ தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்
