எதிர்க்கட்சி ஊடகத்தில் வரும் செய்திகள் மற்றும் பத்திரிக்கையில் வரும் செய்திகளின் அடிப்படையில் தான் எங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றோம். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகள் தவறா? நீங்கள் போடக்கூடிய செய்திகள் குறித்துதான் பேசுகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, வீதிகளில் ரவுடிகள் கத்தியோடு உலா வருகிறார்கள். எந்தெந்த இடத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி ஊடகத்தின் வாயிலாகவும் பத்திரிக்கையின் வாயிலாகவும் வருகிறது. அதன் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்து வருகிறேன். நாங்களாக எந்த கருத்தும் சொல்வதில்லை. நாட்டில் நடைபெறக்கூடிய சம்பவங்களை நீங்கள் படம் பிடித்து தொலைக்காட்சி வாயிலாக காட்டுகிறீர்கள். அதை நாங்கள் பிரதிபலிக்கிறோம்.
2026 தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலம் இருக்கிறதே! 11 மாத காலங்களுக்கு முன்பு எந்த செய்தி சொன்னாலும் அது நிலைக்காது. அதனால் கூட்டணி அமைப்பது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கும், செய்தியாளர்களிடமும் நிச்சயமாக தெரிவிப்போம். தேர்தல் நெருங்குகின்ற போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். நிச்சயமாக நடைபெறுகின்ற போது உங்களுக்கு முழுமையான தகவல் கொடுக்கப்படும்.
மீனவர்கள் இன்று நேற்று மட்டுமல்ல, தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருந்த போதிலும், அம்மா ஆட்சியில் இருந்த போதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆகவே இலங்கை அரசு திட்டமிட்டு, நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவா்களுடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை கையகப்படுத்துவது, மற்றும் அவர்களை கைது செய்வது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது.
நான் முதலமைச்சராக இருந்த போதும் சரி, அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, கைது செய்யப்பட்டவர்களை மத்திய அரசோடு தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்திருக்கிறோம். அது மட்டுமல்ல இலங்கை கடற்படையினரால் எடுத்துச் சென்ற படகுகளை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக கொடுத்திருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர எங்களுக்கு எந்த கட்சியும் எதிரி அல்ல அதனால் தேர்தல் நேரத்தில் யார் யாரெல்லாம் ஒத்த கருத்தோடு இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் எங்களுடன் இணைத்துக் கொள்வோம். தேர்தலுக்கு 11 மாத காலம் இருக்கிறது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் எத்தனை இடங்களில் தேவை இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் செயல்படுவோம்.
ஊடகமும் பத்திரிகையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. எங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். நாட்டில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளின் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்து இருக்கிறது. பள்ளியில் படிக்கக்கூடிய சிறுமிகளுக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்க கூடிய செய்தி டிவியிலும் பேப்பரிலும் வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவ்வளவு மோசமான ஆட்சி, போதை பொருள் மற்றும் கஞ்சா நடமாட்டத்திற்கும், அளவே இல்லை. இன்று குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் காவல்துறையை கண்டு அச்சமே இல்லை சர்வ சாதாரணமாக இன்று கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் தடுத்து நிறுத்த திறமையற்ற அரசாங்கமாக இந்த அரசு உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.
உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்