திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர். சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரிய வருகிறது. இந்த கொடூர ஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த சுபாசினியின் பெற்றோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையில் பணியாற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். மேலும் அவர்கள் காவல்துறையில் பணியாற்றுவதால் இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி வெறிக் கொலைகள், சாதிவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவது வேதனையளிக்கிறது. ஆதிக்க சாதிவெறியாட்டத்தைத் தடுப்பதற்கு காவல்துறையில் ஒரு தனி நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன் வைக்கிறோம்.

ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.