தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி
ஊரப்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்க முன்ற இரு இளம் பெண்கள் மீது மின்சார ரயில் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே இரு இளம் பெண்கள் மீது மின்சார ரயில் மோதியதில் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் புத்தர் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகள் யாழினி (வயது 23), காரைக்குடி சிதம்பரனார் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் சென்சியா (வயது 23), ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரப்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை செல்வதற்காக ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது சென்னை கடற்கரையில் இருந்து வந்த மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே சென்சியா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாழினி என்பவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் யாழினியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகள் மிகுந்த ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதும், அப்போது ரயிலில் சிக்கி விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயணிகள் தண்டவாளங்கள் கடந்து செல்ல மேம்பாலம் இருந்து பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது.