பசுவின் கோமியத்தை கிண்டல் செய்பவர்களெல்லாம் அதன் அறிவியல்ரீதியான தன்மைகளை புரிந்து கொள்ளாதவர்கள் என்று சென்னை ஐஐடி இயக்குநர் கருத்துக்கு ஆதரவாக ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கருத்துத் தெரிரிவித்துள்ளார்.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று, “ பசு சம்ரக்சனா சலா” என்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பசுவின் கோமியத்தின் சக்தி குறித்தும், துறவிகளின் வாழ்க்கை குறித்தும் பேசுகையில் “ பசுவின் கோமியம் மருந்து என்றும் பசுவின் கோமியம் என்பது பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி கொண்டது, பூஞ்சையை எதிர்க்கக்கூடியது, உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது, வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தும் மருத்துவ சக்தி கொண்டது” எனத் தெரிவித்தார்.
ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனமும், கேலியும் உருவாகின. திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், எதற்கும் சளைக்காத ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பதில் அளிக்கையில் “ பசுவின் கோமியத்தில் மருத்துவக் குணம் இருக்கிறது என எனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. பசுவின் கோமியம் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் அமெரிக்காவில் வந்துள்ளன. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைத்தான் கூறினேன். பசுவின் கோமியத்தில் மருத்துவக் குணங்கள் உள்ளன என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார். பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையும் சென்னை ஐஐடி இயக்குநர் கருத்துக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில் “என் உணவு என் உரிமை எனப் பேசுபவர்கள், கோமியம் மருந்து என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் அதை ஏற்க ஏன் மறுக்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், ஏன் அறிவியல்பூர்வமாக மருந்து எனச் சொல்லப்பட்ட கோமியம் குடிப்பதை மட்டும் ஏன் ஏற்கமாட்டீர்கள்” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோட்டி கருத்துக்கு ஆதரவாக ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அவர் அதில் கூறுகையில் “ பசுவின் கோமியத்தை கிண்டல் செய்பவர்களெல்லாம் அதன் மருத்துவ, அறிவியல் குணங்களை புரிந்து கொள்ள சக்தியில்லாதவர்கள். தொழில்வளர்ச்சி அடையாத காலத்தைச் சேர்ந்தச சமூகத்தில் இருந்த மிக ஆரோக்கியமான நபர்களிடமிருந்து, நவீன உணவு முறைகளுக்கு ஆளாகாதவர்களிடம் இருந்து, மல மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மல மாத்திரைகள் உருவாக்கப்பட்டன என்பதும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை மீட்டெடுப்பதில் அவற்றின் பங்கு தெரியாது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிக முக்கியமான அங்கம் குடல் பாக்டீரியாக்கள் அவை நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே பசுவின் கோமியம் மற்றும் சாணத்தில் நன்மை தரும் விஷயங்கள் அடங்கியுள்ளன இது போலித்தனமான மூடநம்பிக்கை அல்ல. நவீன அறிவியல் அங்கு குவிந்து வருகிறது. ஆன்-லைனில் குறுகிய மனதுடன் கண்ணோட்டத்துடன் தீவிரமாக இருக்கும் ஒரு கும்பலின் செயல்.
இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் முறைகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றை இப்போது இந்த உலகம் பாராட்டத் தொடங்கியுள்ளன. பூமியில் மனித வாழ்க்கை இயற்கையுடன் இணக்கமாக இருக்கும் வகையில் தொழில்நுட்பத்தை முழுமையாகக் கண்டுபிடிப்போம்.
பகுத்தறிவுக் கண்ணோட்டம் என்ற போர்வையில் ஆழ்ந்த அறியாமை, மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே எதிர்க்கப்பட்ட சிந்தனை முறைகளைப் பயன்படுத்தி, இங்குள்ள நமது ஆழ்ந்த சிந்தனையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்துவோம்.சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி முழுமையான ஆராய்ச்சியாளர், கல்வியாளர். பசு கோமியத்தின் மருத்துவத் தன்மை குறித்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை காமகோட்டி குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு அறிவியல் அறிவு அடிப்படையிலும் இல்லாமல், தங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை மட்டுமே ஆன்லைன் கும்பல்கள் திசை திருப்புகிறார்கள்”என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.