அரசாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் ஆட்சிமுறையை விமர்சிக்க மக்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. ஆனால், அரசு ஊழியர் அரசை விமர்சித்தால்..? நடவடிக்கை எடுப்பது சரிதான். அதில் தவறு இல்லை. அவர் அரசு ஊழியர். அப்படித்தான் அரசுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதோடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அன்பரசன் என்பவர் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான ஒரு முகநூல் பதிவுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் அன்பரசன் மீது விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவினை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக நிர்வாகி ஜெயகுமார் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘திமுகவை அனுசரித்தால் ‘Promotion’!எதிர்த்தால் ‘Suspension’-ஆ? வேலூரில் காவலர், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முகநூலில் அமைச்சருடன் ஞானசேகரன் இருக்கும் ஒரு பதிவிற்கு கீழ் கமெண்டில் “மானங்கெட்ட திமுக அரசு” என பதிவிட்டுள்ளார்.
அதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். எங்கள் ஆட்சியை விமர்சித்தால் இது தான் பதில் என எச்சரிக்கிறதா திமுக அரசு?
கடின உழைப்பால் காக்கி சட்டை அணிந்த அந்த காவலரின் நேர்மையையும்-கருத்து சுதந்திரத்தையும் பிடுங்கியுள்ளார் திறனற்ற திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆணவப் போக்கு தான் திமுகவின் அழிவின் ஆரம்பம்! காவலரின் நீக்கம் கடுமையான கண்டனத்திற்குரியது’’ எனத் தெரிவித்துள்ளார்.
அரசாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் ஆட்சிமுறையை விமர்சிக்க மக்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. ஆனால், அரசு ஊழியர் அரசை விமர்சித்தால்..? நடவடிக்கை எடுப்பது சரிதான். அதில் தவறு இல்லை. அவர் அரசு ஊழியர்.