
பாஜகவினரும் காங்கிரசாரும் மாறி மாறி கல் வீசிதாக்குதல் நடத்தியதால் தொண்டர்களின் மண்டை உடைந்தது. வாகனங்கள் சேதமாகின. இரு தரப்புக்கும் இடையேயான இந்த மோதலால் நாகர்கோவில் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

ராகுல் காந்தி எம்பியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட வடிவங்களில் இந்த போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலையில் நாகர்கோவில் மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

பாஜக அலுவலகத்தின் அருகில் செல்லும் போது அவர்கள் மோடிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டார்கள். இதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் சிலர் பாஜக அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.
இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பாஜக கொடிகளும் வாகனங்களும் தீக்கிரையாகின . கட்சி வாசலின் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கடும் சேதம் அடைந்தன. பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதனால் காங்கிரசாரை கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர் பாஜகவினர். இந்த மறியலால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார் . பின்னர் போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வைத்தனர். ஆனாலும் நாகர்கோவிலில் இந்த சம்பவத்தால் பதற்றம் இருந்து வருகிறது.



