பிரபல நடிகர் விஜயகுமார் வீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதியில் கை வரிசை காட்டிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.மதுராந்தகம், திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (38). கடந்த 2016-ல், நடிகர் விஜயகுமார் வீட்டில் பூட்டுடைத்து திருடிய வழக்கில் தொடர்புடையவர். அவர் மீது ஆவடி, திருமுல்லைவாயில், ஜெ.ஜெ நகர், கொளத்தூர் தலைமை செயலக காலனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 21 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் பிடிவாரண்ட் வழங்கப்பட்டு இருந்தது. இதனிடையே ஆவடி காவல் ஆணையர் சங்கர் முனுசாமியை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பெயரில் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மதுராந்தகத்தில் பதுங்கி இருப்பதாக திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், செங்கல்பட்டு மாவட்டத்தில், வையாவூர் பகுதியில் பதுங்கி இருந்த முனுசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பல்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்டு தலைமறைவாகிய பின்னர் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் கைது செய்த பின் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட பின், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரபல திரைப்பட நடிகர் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திருட்டு வழக்குகளில் நிலுவையில் இருந்த குற்றவாளியை 21 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
