தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலையை திமுக தக்கவைத்துள்ளதாகவும், இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெல்லும் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் குமுதம், சாணக்யா, இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் மூன்று முக்கிய விஷயங்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் தன்னை ஒரு தலைவராக நிறுத்திவிட்டார். இரண்டாவது சமூக நலத்திட்டங்கள் வாயிலாக தமிழ்நாட்டின் கணிசமான வாக்காளர்களை அரசு சென்றடைந்துள்ளது. மூன்றாவது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு நேரேட்டிவை களத்திலும், நீதிமன்றத்திலும், அரசியல் செயல்பாட்டிலும் தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த 3 அம்சங்களும் திமுகவின் பலம் என்று இந்தியா டுடே ஒபினியனில் சொல்கிறார்கள். ஸ்டாலின் எப்படி தலைவராக உருவெடுக்கிறார் என்றால் மோடியால். மோடியின் ஆட்சி தமிழ்நாட்டின் மரபணுவில் உள்ள பிராமணிய எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்றவைகளுக்கு மோடி ஒரு டானிக் போல வேலை செய்திருக்கிறார். ஸ்டாலின் இதை சரியாக கணித்து பயன்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை என்பது 2014ல் ஜெயலலிதாவில் தொடங்கி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மிகவும் வலிமையாக உள்ளது. அதற்கு காரணம் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்மை ஒடுக்குகிறார்கள் என்று திமுக அன்றாடம் மக்களிடம் கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக பெஞ்சல் புயல் நிவாரண நிதி குறைந்த அளவே கொடுத்தார்கள், கல்விக்கான நிதி ரூ.2,000 கோடி கொடுக்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டம், ஜி.எஸ்.டியில் வழங்க வேண்டிய நிதி நிலுவையில் உள்ளன. மெட்ரோ திட்டம் கேட்பதற்கு கடிதம் மேல் கடிதம் எழுத வேண்டி உள்ளது. இதுபோன்ற செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக திமுக மக்கள் மத்தியில் கொண்டுசென்று கொணடிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சிசெய்ய விடாமல் பாஜக குடைச்சல் தருகிறது என்று திமுக மக்கள் மத்தியில் கொண்டுசென்றுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கிறபோது திமுக பலமாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த நேரேட்டிவை கொண்டுபோக முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் ஒட்டவில்லை. மற்றொன்று அவர்களுக்குள்ளே இருக்கிற முரண்பாடுகள். அதிமுக – பாஜக என்னதான் கூட்டணி வைத்துக் கொண்டாலும், அந்த கூட்டணி என்பது பொருந்தாக் கூட்டணியாகத்தான் உள்ளது. எடப்பாடி யார் அந்த சம்பந்தி? என்ற கேள்விக்காக தான் திருட்டுத்தனமாக கார் ஏறி அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்தார். அமித்ஷா வம்படியாக வந்து அதிமுகவை கூட்டணியில் சேர்த்து விட்டார். எடப்பாடிக்காக அண்ணாமலையை தூக்கினார்கள்.அண்ணாமலை, எடப்பாடி மேல் உள்ள கோபத்தை தீர்த்துக்கொள்வதாக இல்லை. எடப்பாடியை பொருத்தவரை கூட்டணி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் கட்சி என் கையில் தான் இருக்கணும். இரட்டை இலை எனக்குதான் என்று சொல்கிறார். ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஆனால் அவர்கள் நாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாமக வந்தால்தான், அந்த கூட்டணி வலிமை அடையும் என்கிறார்கள். ஆனால் பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஒரு நாடகம் போய்க் கொண்டிருக்கிறது. அன்புமணியின் எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது. அவருக்கு சீட்டு கொடுத்தால்தான் அவர்கள் கூட்டணிக்கு வருவார்கள். அப்படி சீட்டு கொடுக்கா விட்டால் இரு கட்களுக்கும் ஜெல் ஆகாது. அப்போது, பாமக வந்து கூட்டணியில் சேர்ந்தாலும் பயன் இருக்காது. தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லி எடப்பாடி பழனிசாமி பட்டை நாமம் போட்டுவிட்டார். பிரேமலதாவிடம் வாக்கு சதவீதமும் இல்லாததால், விதி வசம் வந்தது வரட்டும் என்று போய்க் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் வந்தாலும் பயன் இல்லை. இவர்கள் எல்லோருக்கும் உட்பகை, முரண்பாடுகள் இருக்கிறது.
சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக – பாஜக கூட்டணி 41%, திமுக – 30%, தவெக- 22%, சீமான் – 7% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாண்டேவின கணக்கின்படி தமிழ்நாட்டில் 70% பேர் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். 30% பேர் தான் திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். இது நம்புகிற விதமாக உள்ளதா? தமிழ்நாட்டில் 70% திமுக எதிர்ப்பு வாக்குகள் உள்ளது என்பதே கள எதிர்த்தத்திற்கு எதிரானதாகும். இந்தியா டுடே ஒபீனியனில் கள எதார்த்தம், மத்திய அரசை எதிர்ப்பது, சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றில் திமுக முன்னிலை வகிக்கிறது. அப்படி உள்ளபோது திமுக எதிர்ப்பு வாக்குகளே குறைவாகத்தான் உள்ளது. அதிகபட்சமாக 60% – 40% ஆக வைத்துக்கொள்வோம். இந்த 40 சதவீத வாக்குகளை பங்கு போட 3 பேர் தயாராக உள்ளனர். சீமான், தவெக விஜய், அதிமுக – பாஜக கூட்டடணி. திமுக எதிர்ப்பு வாக்குகளுக்காக இவர்கள் 3 பேரும் முன்வைக்கிற அரசியல் என்பது ஒன்றுதான். ஊழல், குடும்ப ஆட்சி, சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது. இதைதான் மூவரும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆனால் இது எதுவும் ஓரிரு நாள் பேசு பொருளாக இருக்கிறதே தவிர, பிரச்சினை தீர்க்கப்பட்டால் உடனே முடிந்து விடும். இந்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடாது. திமுக எதிர்ப்பு வாக்குகள் குறைவாக இருக்கிறபோது, அதை பிரிக்க 3 பேர் போட்டியிடுகின்றனர். எப்படி இவர்களுக்கு 70 சதவீத வாக்குகள் போகும்?
சீமான் ஜெயலலிதா இருக்கும்போது 1% வாக்குகளை வைத்திருந்தார். தற்போது 8% வாக்குகள் உள்ளதாக ரவீந்திரன் துரைசாமி சொல்கிறார். அவரது பிரச்சினை என்ன என்றால்? அவர் வைத்த பேப்பர்களை எல்லாம் அமித்ஷா தூக்கி குப்பையில் போட்டு விட்டார். அவர் ரஜினிகாந்திடம் எல்லாம் தொடர்பு வைத்து இருக்கலாம். ஆனால் அமித் ஷாவிடம் அவருக்கு செல்வாக்கு கிடையாது. அதனால் தூக்கி எரிந்து விட்டார்கள். அந்த அதிர்ச்சியில் அவர் சீமானை தூக்கிவைத்து பேசுகிறார். அவர் எடப்பாடியை எதிர்ப்பதற்கு காரணம் அதிமுகவின் வாக்குகளை பாஜக எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக தான். தற்போது எடப்பாடியை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் ரவீந்திரன் துரைசாமி, குருமூர்த்தி போன்ற பலருக்கும் உள்ளது. இவர்களின் வாக்குகள் சேரவே சேராது.
திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் விஜய் பிரித்தது போக உள்ளது தான் சீமானுக்கு கிடைக்கும். நிச்சயமாக 8 சதவீதம் வாக்குகள் அவருக்கு கிடைக்காது. அதை விஜய் பிரித்துவிடுவார். விஜயின் முக்கிய வாக்கு வங்கி என்பது நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் தான். அவருக்கு பாஜக எதிர்ப்பு வாக்குகள் நிச்சயம் போகவே போகாது. ஏனென்றால் விஜய் அவரது அரசியலில் எங்கேயும் பாஜகவை எதிர்த்து பேசியது கிடையாது. திமுக எதிர்ப்பு வாக்குகள் கொஞ்சம் அவருக்கும் போகும். சீமான், அதிமுகவுக்கு போகும். விஜய்க்கு சீமானைவிட ஓரிரு சதவீத வாக்குகள் தான் கூடுதலாக கிடைக்கும். அதற்கு மேல் கிடைக்காது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்ற கணக்குப்படி ஒருபோதும் வாக்குகள் வராது. ஆன்டி மோடி அலை, ஆன்டி பாஜக அலை தொடர்ந்து திமுக வைத்துக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கும் வாக்குகள் குறைவாகதான் கிடைக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் ரெங்கராஜ் பாண்டே சொல்வது போல அதிமுக – பாஜகவுக்கு 70 சதவீத வாக்குகள் எல்லாம் வரவே வராது. அவர் தனது உள்கணக்குகளை எல்லாம் சர்வேயாக எடுத்து வந்து சொல்கிறார். அது சாத்தியமானது இல்லை.
குமுதம் சர்வேயில் திமுகவுக்கு 55 சதவீதம் வாக்குகள் வரும் என்று சொல்கிறார்கள். அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதை வைத்து நான் சொல்ல வில்லை. பாஜக தமிழகத்தை ஆளவிடவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய நலத் திட்டங்களை கெடுக்கிறது. சாதி மத ரீதியாக மக்களை பிளவு படுத்துகிறது. இந்த விஷயங்களை அனைத்து முறைகளிலும் எதிர்த்து திமுக குரல் கொடுக்கிறது. இது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஸ்டாலின் ஒரு தலைவராக உயர்ந்துள்ளார். கூட்டணி கட்சிகள் சொல்கிற விமர்சனங்களையும் அவர் ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்துகிறார். கலைஞர் பல விஷயங்களில் கறாராக இருப்பார். ஆனால் ஸ்டாலின் விட்டுக்கொடுத்து போகிறார் என்பதால் திமுக கூட்டணி பலமாக உள்ளது. இதற்கு நேர் எதிராக அதிமுக கூட்டணி கலகலத்து போய் உள்ளது. டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்கள் எடப்பாடிக்கு எதிராக வேலை செய்தாலோ, அண்ணாமலை வார் ரூம் கொங்கு மண்டலத்தில் வேலை பார்த்தாலோ அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடையும். விஜய் களத்திற்கே வராமல் மனப்பால் குடித்துக்கொண்டு கொஞ்சம் வாக்குகளை பெறுவார். சீமான் கத்திகத்தி தொண்டை தண்ணி வீணாகுமே தவிர 8 சதவீத வாக்குகளை எல்லாம் வாங்க மாட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.