தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு! பாதிநாள் எரிந்த ரயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொது சுகாதாரம் என பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள இருளர் காலனி மற்றும் வரதராஜபுரம் ஆகிய இரண்டு கிராம மக்கள் ஊரையே காலி செய்கிற அளவு ரெயில் விபத்தால் உண்டான தீயும் புகைமூட்டமும் இருந்துள்ளது. சென்னை மணலியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்னக சரக்கு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி (13.07.2025) ஞாயிற்றுக்கிழமை சென்ற போது தான் விபத்து நடந்திருக்கிறது.
அதிகாலை வேளையில், திருவள்ளூர் மாவட்ட இருளர் காலனி அருகே ரயில் சென்ற போதுதான், இருப்புப் பாதையை விட்டு விலகி தடம் புரண்டதாக தெரிகிறது. இந்த திடீர் ‘தடம்’ புரளலால் டீசலை நிரப்பியிருந்த ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து அது பத்துமணி நேரத்துக்கு மேலாக மிக அடர்த்தியாகவே எரிந்துள்ளது. புகை மூட்டம், இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு காற்றில் விஷமாக கலந்து விட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் திருவள்ளூர், அரக்கோணம், பொன்னேரி, காஞ்சிபுரம், வேலூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல முக்கிய ரெயில் பாதைவழி சேவையானது.

பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த தீ விபத்தால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மின்கம்பங்கள் பழுதாகி, அது இன்னொரு தனி பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறது. 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் எடையுள்ள டீசல் எரிபொருள் மொத்தமாக 10 மணி நேரத்துக்கு எரிந்து முடிந்திருக்கிறது. தீ அவிப்பில் எத்தனையோ புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்திருந்த போதிலும், 12 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் டீசல் மொத்தமாய் எரிந்து முடிந்த பிறகுதான் தீயின் பக்கத்தில் தீயணைப்பு வீரர்களே நான்கு இருப்புப்பாதை (டிராக்) யில் மூன்று சேதம் என்று சொல்கிறார்கள்.
பொதுப்போக்குவரத்து கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், பொதுமக்கள் தவித்துப் போயிருக்கிறார்கள். நேர்முகத்தேர்வு, மருத்துவம், திருமணம், தனி நபர்/ அரசு ஊழியர் அலுவல் பயணம் என எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் அத்தனையும் சிதறிப் போயிருக்கிறது. “விபத்துக்கான காரணம் தெரியவில்லை என விசாரணைக்குழு அமைக்கப் பட்டுள்ளது” என்று தென்னக ரெயில்வேயின் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்திருக்கிறார். தமிழக அமைச்சர் சா.மு.நாசர், சம்பவ இடத்துக்குப் போய் ஆய்வு நடத்திவிட்டு பாதிக்கப்பட்டவர்களை வேறிடத்தில் தங்க வைத்திருக்கிறார். உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். ரயில்பயணம் பாதிக்கப்பட்டு நின்றவர்களுக்கு பயணத்துக்கான மாற்று ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற தகவல்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
“இதுபோன்று ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம், இருப்பு பாதைகள் (ட்ராக்) சரியான சீரமைப்பில் இல்லாததும், உயர் அழுத்த மின்கம்பி பராமரிப்பு பணிகளை முறைப்படுத்தாமல் இருப்பதும் தான். ரயில்வே துறையின் உயரதிகாரிகள் காட்டி வரும் அலட்சியமும் இதுபோன்ற தொடர் விபத்துகளின் பின்னணியில் இருக்கிறது. ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடாமல், அதை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டுப் போனது. பொது பட்ஜெட்டில் ரெயில்வே இருக்கும் காரணத்தால் போதிய நிதியுதவி கிடைக்க வழியின்றி, ரெயில்வேயின் முக்கிய பராமரிப்பு பணிகள் முடங்கிப்போய்க் கிடக்கிறது. எந்த வேலைக்கும் தகுதிவாய்ந்த ஆள்கள் இல்லை.
பல ஆண்டுகளாகவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே, பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதும் நடக்கிறது. குறைந்த அளவிலான ஆட்களை வைத்துக் கொண்டு, முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை, ரயில்வேயில் உருவாகி உள்ளது. இன்னொரு பக்கம் ஆளில்லா ரயில்வே ‘கேட்’ களுக்கான ‘கேட் -கீப்பர்’ பணியிடங்கள் நிரப்பாமலே கிடக்கிறது. அப்படி நிரப்பப்பட்ட பணியிடங்களிலும் மாநில மொழி தெரியாத ஆட்களை ‘ கேட் – கீப்பர்’ வேலையில் அமர்த்தி வைத்துள்ளனர். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்களை சரக்கு ரயில்களில் கொண்டு செல்லும் போது, எரி பொருட்களுடன் கூடுதல் (நீர்க் கலன்கள்) கலன்களை அவற்றோடு இணைத்து அதில் தண்ணீர் உள்ளிட்ட தீயணைப்பு கருவிகளையும், நன்கு திறமையான ஆள்களையும் உடன் கொண்டு போனால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. தீ அவிப்பு பணிக்கே ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பாதுகாப்பு தீ அவிப்பு வீரர்களின் கூடுதல் உதவி தேவைப் பட்டிருக்கிறது.
திருவள்ளூரோடு ஒட்டியுள்ள இருளர்காலனி, வரதராஜபுரம் பகுதியில் வண்டி குடைசாய்வது போல ரயில்பெட்டிகள் ஊருக்குள் சாய்ந்து விழுந்துள்ளது. இருப்புப்பாதை சரி இல்லையா? அல்லது விபத்துக்கு காரணம் நாச வேலையா என்ற கேள்வி எழுகிறது. 900 டன் எடை கச்சா எண்ணெய்யுடன் 18 எரிபொருள் டேங்கர்கள் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சில டேங்கர்கள் உருண்டு விழுந்து பிடித்த தீயே இவ்வளவு பாதிப்பு என்கிற போது மொத்தமும் விபத்தில் சிக்கியிருந்தால் என்ன நிலைமை ?
சரக்கு ரயிலில் எரிபொருள் ஆயிலை நிரப்பி அனுப்பி வைத்த இடத்திலேயே தொடங்கியதா குறைபாடு? அல்லது பயணத்தின் போது ஏற்பட்டதா பாதுகாப்பு குறைபாடு? விபத்தாக மட்டும் இது முடிந்து போய் விடவில்லை. காற்றின் தன்மை மாறுபட்டு நச்சு அதிகமாய் காற்றில் கலந்துள்ளதை மாசு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு வியாதிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வோர், நோய் வாய்ப்பட்டோர், முதியவர்கள், குழந்தைகள், கருவுற்றிருக்கும் பெண்கள் என ஒரு மிகப்பெரும் மனித சமுதாயமே இதில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தின் மூலம் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகளும், அரசாங்கமும் தெரிவித்தாலும் இந்த விபத்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
பொது பட்ஜெட்டில் உள்ள ரெயில்வே தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்கவேண்டும். எரிபொருள்களை கொண்டுபோகும் சரக்கு ரயில்களில் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயிலை இயக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் இருப்புப்பாதைகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்“ என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…குடியரசு தலைவர் அறிவிப்பு