ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் மாதம் ரூ.5,000 மேல் செலவு செய்யும் பட்சத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தராகண்ட் மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, அரசு ஊழியர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இதை பலரும் “அபத்தமானது” என விமர்சித்துள்ளனர். ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட செலவுகளுக்கே இந்த வரம்பு போதாது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகாண்ட்டில் கடந்த 14 ஆம் தேதி முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவானது அம்மாநில அரசு ஊழியர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்ததுடன் அதுதொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு மிக முக்கிய காரணமாகும்.

உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ‛‛ அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் தங்களின் ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்து மற்றும் பொருட்களை வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ, அல்லது வேறு வழியில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அதுகுறித்து தங்களது உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் அரசு ஊழியர்களிடம் பெரும் அதிருப்தி மற்றும் கோபத்தை எற்படுத்தியுள்ளது.