மாற்றுத் திறனாளியான தாய் மகளின் நீட் புத்தகத்தை படித்து, மகளின் வழிகாட்டுதலில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடம் பெற்றுள்ளாா்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அமுதவல்லி என்ற 49 வயது பெண் எம்பிபிஎஸ் படிப்பு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். தனது மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு படிக்கும் பொழுது தான் படித்ததை தாயிடம் பகிர்ந்து கொண்டு படித்ததன் மூலம் ஏற்பட்ட ஆர்வத்தால் தாயும் நீட் தேர்வு எழுதினார். இதனால் நீட் தேர்வில் தாய் 147 மதிப்பெண்ணும், மகள் 460 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இதனால் எஸ் சி பிரிவில் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் இன்று கலந்தாய்வில் தாய் அமுதவல்லி பங்கேற்றார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. மகள் பொதுக்கலந்தாய்வில் விண்ணப்பித்துள்ளார். அவருக்கும் எம்பிபிஎஸ் இடம் உறுதியாகும் நிலையில் ஒரே குடும்பத்தில் முதல் முயற்சியிலேயே மருத்துவர் கனவு நிறைவேறியுள்ளது.
