மக்களவை தேர்தல் மோசடியில் மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையருக்கும் மட்டுமே தொடர்பு இருந்திருக்காது என்றும், பல லட்சம் பேருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பதற்காக அவர்கள் வெளியே வந்து உண்மைகளை சொல்ல வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, பாஜக வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் முழுமையான பின்னணியை விளக்கி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பொதுமக்களிடம் சந்தேகமாக இருந்ததுதான். மக்களவை தேர்தல் முடிவுகள் வந்தபோதே இந்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்த உடன் இந்த சந்தேகம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஓரு சட்டமன்றத் தொகுதியில் பகுப்பாய்வு மூலம் முறைகேட்டை ராகுல்காந்தி அதை நிரூபித்துள்ளார். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் விவரம் மறுநாள் வெளியாகிய வாக்குகளில் இருந்து மாறுபடும். அது குறைந்தபட்சம் ஒரு சதவீதத்திற்கு குறைவாக வரும். ஆனால் தமிழ்நாட்டிலேயே சில தொகுதிகளில் அதிகமாக வந்தது.
வடமாநிலங்களில் 10 சதவீதம் வாக்குகள் வரை கூடுதலாக பதிவாகி இருந்தது. பொதுவாக 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அதற்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள். அது தேர்தல் ஆணைய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும். ஆனால் அதை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து, சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்கிறது. அப்போது வாக்காளர்களை அதிக நேரம் வாக்களிக்க வைத்ததாக கூறுவதே ஒரு மோசடியாகும். மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த உடனே தேர்தல் ஆணையம் இந்த வாதத்தை வைத்தபோதே, அது அடிபட்டு போய்விட்டது. தமிழ்நாடு போன்ற பாஜக 40க்கு 40 தோற்ற இடங்களில் வாக்கு சதவீதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. கோவையில் அண்ணாமலை இரண்டாவது பிடித்தார். காரணம் அதிமுகவின் வாக்குகள் பெரிய அளவுக்கு திருட்டு போய் உள்ளது என்று தான் நான் நினைத்தேன். காரணம் அவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. பூத்வாரியாக வாக்குப்பதிவு நிலவரத்தை அதிமுக ஆய்வு மேற்கொள்ளவில்லை. அதற்குள்ளாக பாஜக கூட்டணிக்கே அவர்கள் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் பாஜக 2வது வந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டால் இந்த பிரச்சினை வரும்.
இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கான ஒரே வழி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடிப்படையிலான பகுப்பாய்வுதான். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மிகவும் அவசியமானதாகும். அரசியல் கட்சிகள் தங்களின் பூத் ஏஜெண்டுகளை வைத்துதான் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பார்கள். கட்சி மேலிடம் இதுபோன்று வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது கிடையாது. ஆனால் ஒரு மாநில வாக்காளர் பட்டியலையும், மற்றொரு மாநில வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. அதற்கான எந்தவித வசதிகளும் கிடையாது. இந்த சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று வரும்போது பிரச்சினை ஏற்படுகிறது. கடந்த 25 வருடங்களில் வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை என்பது அதிகரித்துவிட்டது. இது இயல்பான ஒரு பிரச்சினையாகும். இதை பாஜகவினர் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். எப்படி எனில் இரட்டை வாக்காளர்கள், ஒரே அறையில் ஏராளமான வாக்காளர்கள், போலியான முகவரியில் 50 முதல் 60 வாக்காளர்கள். வாக்காளர்களை பல இடங்களில் வாக்களிக்க அனுமதிப்பது போன்றவற்றை ராகுல்காந்தி சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு லட்சம் வாக்குகளை செயற்கையாக சேர்த்துவிட்டோம். அப்போது ஒரு லட்சம் வாக்குகளை போடுவதற்கு ஆட்கள் வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வளவு வாக்காளர்களை திரட்ட முடியாது. அப்போதுதான் ஒரே ஆள் பல வாக்குச்சாவடிகளில் போடுவது. அப்போது பூத்தில் உள்ள சரிபார்க்கும் நபர்களை சரிகட்டுவது. சிசிடிவி காட்சிகளில் ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவார். அடையாள மை வைப்பது போன்ற பிரச்சினைகளை அனைவரும் ஒன்றாக சேர்ந்தால்தான் செய்ய முடியும்.
ராகுல்காந்தி, துப்பறியும் நிறுவனங்களை வைத்து ஒரே ஒரு தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தற்போதுள்ள நிலையில் இதனை ஆய்வு செய்ய பல மாதங்கள் ஆகின்றன. காரணம் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் ஆவணங்களை தர மறுக்கிறது. ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு என்பது ஒரு பனிப்பாறையின் முனைதான். அதற்கு பதில் சொல்வதை விடுத்து, தேர்தல் ஆணையம் மிரட்டல் போக்கில் செயல்படுவது இன்னும் மோசமானது. ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபெற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதற்கு ஒரு சேம்பிள் ஆக மகாதேவபுரா தொகுதியை எடுத்துக்கொண்டிருக்கிறார். குறிப்பட்ட மக்களவை தொகுதியில் 5 சட்டமன்றத் தொகுதியில் ஒரு கட்சி வெற்றி பெற்றுவிட்டது. 6-வது சட்டமன்றத் தொகுதியில் வாக்கு வித்தியாசம் மாறியதால் மொத்த மக்களவை தொகுதியும் போய்விட்டது என்பதுதான் ராகுல்காந்தி வைத்த குற்றச்சாட்டு. அப்போது அந்த ஒரு தொகுதியில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்றுதான் அனைத்துக்கட்சிகளும் விரும்பும். அப்படி ஆய்வு செய்யும் போது மகாதேவபுரா தொகுதியில் இவ்வளவு மோசடிகள் நடைபெற்றுள்ளன.
அப்போது இதேபோல்தான் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களிலும் மோசடி நடைபெற்றுள்ளது என்று ராகுல்காந்தி சொல்கிறார். கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்றால், ராகுல்காந்தி கர்நாடக வாக்காளராக இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக நாடு முழுவதற்கும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையமாகும். தங்களிடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தாலே, ராகுல்காந்தி சொன்னது உண்மையா? இல்லையா? என்று தெரிவிக்கலாமா? ஆனால் ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ராகுல்காந்தி நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்கிற அடிப்படையில், இந்த குற்றச்சாட்டை பிரதமர் மோடிக்கு முன்வைக்கிறார். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின் போது, நான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள், அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்தல் நிலவரம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்தோம். அப்போது, அதிகபட்சம் 240 தொகுதிகளும், குறைந்தபட்சம் 200 தொகுதிகளும் பாஜகவுக்கு வந்தன. இதை அடிப்படையாக கொண்டுதான் ராகுல்காந்தி 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மாறியருந்தாலும், தேர்தல் முடிவுகள் மாறும் என்று சொல்கிறார். நெருக்கடியான ஒரு தேர்தலில் தான் மோடி மீண்டும் பிரதமராகி உள்ளார். இந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்கு முன்னதாகவே அவர்கள் ஆயத்தமாகி இருப்பார்கள். பாஜக 400 லட்சியம் வைத்து 240 தொகுதிகளை பெற்றனர். அப்போது, அந்த 400 தொகுதிகளை அடைவதற்கு மோசடிகளில் ஈடுபட்டிருக்க செய்திருப்பார்கள் தானே. இதனை மோடி, அமித்ஷா, தலைமை தேர்தல் ஆணையருக்கு சொல்லி நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியும் இந்த மோசடியில் பங்கேற்க வேண்டும். இதில் பெரிய சங்கிலித்தொடர் உள்ளது. ஆனால் ராகுல்காந்தி குற்றம்சாட்டுவதால் வெறும் அரசியல் குற்றச்சாட்டாக கடந்து செல்கிறார்கள்.
இந்த சதியில் பங்கேற்றவர்களில், ஒரு சிலர் உண்மையில் விருப்பம் இல்லாமல் கூட பங்கேற்றிருப்பார்கள். அவர்கள் வெளியில் வந்து இந்த சதியை வெளியிட வேண்டும். இந்த விசில் புளோயர்கள் வர வேண்டும் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். ராகுல்காந்தி தேர்தலே திருடப்பட்டது என்று சொல்லிவிட்டார். பிரதமர் மோடி, தேர்தலை திருடிவிட்டார் என்றுதான் அர்த்தம். இது மோடியை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுதான். ஆனால் தேர்தல் ஆணையம் முந்திக்கொண்டது. இதற்கு மோடிதான் பதில் சொல்ல வேண்டும். வாரணாசி தொகுதியில் முதல் இரண்டு சுற்றுகளில் மோடி பின்தங்கி தான் இருந்தார். பின்னர் எப்படி அவர் மேலே வந்தார் என்று யாருக்கும் தெரியாது. இந்த மோசடியில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புகள் கிடையாது. அப்படி பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கும். அவர்கள் வெளியே வர வேண்டியது காலத்தின் காட்டாயம் என்று நான் உணர்கிறேன்.